குடும்பச் சொத்து விவகாரம்: நாயுடு ஹால் உரிமையாளர் வேணுகோபால் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
செய்தி: உ.சசிகுமார்,
பிரபலமான ஆடை விற்பனை நிறுவனமான நாயுடு ஹால் நிறுவனத்தின் உரிமையாளர் வேணுகோபால் உள்ளிட்ட ஆறு பேர் மீது, குடும்பச் சொத்தை சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் தெரியாமல் மகளுக்கு தானமாகப் பதிவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பூர்ணிமா என்பவர் சென்னையில் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் ஆனது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி தெரிவிக்கிறது.
17 சென்ட் நிலம் தொடர்பாகப் புகார்!
புகாரின்படி, மறைந்த எம்.ஜி. நாயுடு குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் திருப்பத்தூர் மாவட்டம், கைலாசகிரி பகுதியில் உள்ள 17 சென்ட் நிலம் தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது.
அந்த நிலத்தின் சட்டப்பூர்வ வாரிசுகளாகத் தாங்கள் இருப்பதாகக் கூறும் பூர்ணிமா, தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் அந்த நிலத்தை வேணுகோபால் 2021ஆம் ஆண்டு தனது மகள் நந்திதாவுக்குத் தானமாகச் செட்டில்மென்ட் செய்து கொடுத்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், நிலம் தொடர்பான ஆவணங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளதாகச் செய்தி குறிப்பிடுகிறது.
அரசு அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு!
இந்த விவகாரத்தில் அப்போது பணியில் இருந்த ஆம்பூர் சார் பதிவாளர், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புகார் உமராபாத் காவல் நிலைய விசாரணைக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணைக்குப் பிறகு வேணுகோபால், அவரது மகள் நந்திதா உள்ளிட்ட ஆறு பேர் மீது மோசடி உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
விசாரணையில் உண்மை வெளிவருமா?
குடும்பச் சொத்து தொடர்பான இந்த விவகாரத்தில் நிலத்தின் மூலப் பத்திரங்கள், செட்டில்மென்ட் ஆவணங்கள், சட்டப்பூர்வ வாரிசுகள் தொடர்பான பதிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் ஆவணங்கள் விசாரணைக்கு முக்கியமானவையாக இருக்கும்.
குடும்பச் சொத்து தொடர்பான ஆவணப் பதிவுகள் சட்டப்படி நடைபெற்றனவா? வாரிசுரிமை தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கங்கள் என்ன? விசாரணை முடிவில் இந்த விவகாரத்தில் மேலும் என்ன தகவல்கள் வெளியாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
குறிப்பு இந்த திலாலங்கடி மேட்டருக்கு பக்கபலமாக இருந்த பாரதி என்கின்ற அதிகாரி தற்பொழுது குற்றம் சாட்டப்பட்ட நபராக பார்க்கப்படுகிறார்.
மேலும் நாயுடு ஹால் நிறுவனம் என்பது 1938 ஆம் அப்போதைய வட ஆற்காடு மாவட்டம், தற்போதைய வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்டது பின்னாளில் பெண்களுக்கான பிரத்யோக ஆடை வடிவமைப்பை சென்னையில் முன் நிறுத்தி வைத்து தற்பொழுது சிறந்து விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

admin
