ஈரானை வெளுத்து கட்டிய இங்கிலாந்து! 2 க்கு 6 கோல் போட்டு அசத்தல்!

ஈரானை வெளுத்து கட்டிய இங்கிலாந்து! 2 க்கு 6 கோல் போட்டு அசத்தல்!

 ம.பா.கெஜராஜ்,

 உலக கோப்பை கால் பந்தாட்டத்தின் இரண்டாவது நாளில் பரபரப்பான ஆட்டங்களை காண முடிந்தது. இதில் மூன்று போட்டிகள் நடந்த நிலையில் ஈரான் மீது 6 கோல் போட்ட இங்கிலாந்து சூப்பராக விளையாடியது, பதிலுக்கு ஈரான் 2 கோல்களை மட்டுமே போட்டு போராடியது.

 கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 10 நிமிடம் அளிக்கப்பட்டது. 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.

  அதே நேரத்தில்  குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார். இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

முன்னதாக மாலை 6.30 மணிக்கு கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற குரூப்-பி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது.

 ஜூட் பெலிங்காம் (35வது நிமிடம்), புகாயோ சகா (43), ரகீம் ஸ்டெர்லிங் (45+1) கோல் அடித்தனர். இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது.

 புகாயோ சகா 62வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறினர். போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என தொடர்ந்து போராடினர்.

   65-வது நிமிடத்தில் ஈரான் அணியின் மெஹ்தி கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு 71வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஜேக் கிரீலிஸ் (89வது நிமிடம்) கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 6-1 முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் ஈரான் வீரர் மெஹ்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6-2 என வெற்றி பெற்றது புள்ளிகளை பெற்றது