திமுகவை நம்பாதீர்கள் - நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்"தவெக தலைவர் விஜய் பேச்சு! புஸ்ஸியை ஆங்கிலத்தில் வெளுத்த பெண் எஸ்.பி!

திமுகவை நம்பாதீர்கள் - நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்"தவெக தலைவர் விஜய் பேச்சு! புஸ்ஸியை ஆங்கிலத்தில் வெளுத்த பெண் எஸ்.பி!

ம.பா.கெஜராஜ்,

 திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்" என தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார். புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசும்போது, "ஒன்றிய அரசு தான் தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் பார்க்கிறது. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் நம் உறவுதான்.

   1977-ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, எம்ஜிஆர் 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழ்நாட்டிற்கு அலெர்ட் செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.

   தமிழக மக்களைப் போலவே, புதுச்சேரி மக்களும் கடந்த 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன், அது எனது கடமையும்கூட.

   புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம்.

   புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

  பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது.

   இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது.

   இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் 200 நாட்களாகியும் இன்னும் அந்த பதவிக்கு யாரும் அமர்த்தப்படவில்லை.

  இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமதிப்பதாக அம்மக்களே சொல்கிறார்கள்.

புதுச்சேரியின் முக்கிய அங்கமாக உள்ள காரைக்கால், ஏனாம் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி மக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்கால் பகுதிகள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

   சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி-கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

 யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் புதுச்சேரி, மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை, அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்கள் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை.

  அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாக மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுகிறது.

மற்ற தேவைகளுக்கு வெளி சந்தையில் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி.

 இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாத காரணத்தினால் வெளியே கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் தேவை. புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்ற எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... வெற்றி நிச்சயம் " இவ்வாறு அவர் பேசினார்.

  "தவெக தலைவர் விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை" என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

   விஜய்யின் பேச்சுக்கு பதில் அளித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், "விஜய்யை பொருத்தவரை புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லிக் கொடுத்தவர்கள், சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

தவறான கருத்துகளை மக்களிடத்தில் விஜய் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை. பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் எதையாவது பேச வேண்டும் என்றுதான் அவர் பேசியிருக்கிறார்.

   விஜய் பேசியது கூட 12 நிமிடங்களுக்குள் தான். அவர் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எதையாவது பேச வேண்டும், ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் எதுவும் உண்மை இல்லை" என்றார்.

 இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான் என்ற விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ரேஷன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்கு பதிலாக பணமாக மக்களுக்கு போடப்பட்டு வந்தது.

ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம், அரிசியாக போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நேரடி பணப்பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய அரசின் ஒப்புதலோடு இன்றைக்கு இலவச அரிசி திட்டம் ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார் என்றார்.

   டோக்கன் இல்லாதவர்களையும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் அனுமதிக்கவேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவிக்க அதற்கு பெண் ஐபிஎஸ் அதிகாரி கோபமாக சவுண்டு விட்டார். ஏற்கனவே 40 உயிர் போயிருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்க எனக்கு சொல்லித்தரவேண்டாம் என்று ஆங்கிலத்தில் லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார்.