நீண்ட இழுபறிக்கு பின்னர் பீகாரின் முதல்வர் வேட்பாளர் முடிவு!
ம.பா.கெஜராஜ்,
நீண்ட இழுபறிக்கு பின்னர் பீகார்¢ சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
என்டிஏ கூட்டணியில் கடந்த 12-ம் தேதி தொகுதிப் பங்கீடு சுமுகமாக இறுதி செய்யப்பட்டது. ஆனால், மெகா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், விஐபி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல், தேசிய மகா சபா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இரு கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆர்ஜேடி சார்பில் 143, காங்கிரஸ் சார்பில் 61, இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல் சார்பில் 20, விஐபி சார்பில் 15, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 9, மார்க்சிஸ்ட் சார்பில் 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

admin
