ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்! பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து — பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்!

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்! பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து — பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் சி.ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்றும் அறிவித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வார இறுதி விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில், கடந்த வாரம் மறைந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்
வளைகுடா பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு, ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்தத் திட்டம் வரும் பொங்கல் திருநாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும், சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயனடையும் எனவும் முதல்வர் கூறினார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்டகாலமாக போராடி வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர், அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்ததாக தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சிக்கும் விமான நிலையங்களுக்கும் உள்ள முக்கியத்துவத்தை தான் நன்கு அறிந்திருப்பதாக கூறிய அவர், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரமும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு இருப்பதாகவும், ஏற்கெனவே அளித்திருந்த உறுதியை நிறைவேற்றும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

மாற்று இடம் தேர்வு
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அந்த இடங்களின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் புதிய விமான நிலையத்துக்கான இடம் இறுதி செய்யப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டெர்மினல்-5’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது நடைபெற்று வரும் டெர்மினல்-3 பணிகள் நிறைவடைந்ததும் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

டெர்மினல்-5 செயல்பாட்டுக்கு வந்த பின்னர், சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 5.5 கோடியாக அதிகரிக்கும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.