ரூ.12,007 கோடி வருவாய் - ரூ.4,978 கோடி நஷ்டம் -  தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பகீர்!

ரூ.12,007 கோடி வருவாய் - ரூ.4,978 கோடி நஷ்டம் -  தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பகீர்!

ம.பா.கெஜராஜ்,

 நடப்பு நிதியாண்டில்  2022-23-ல்  தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,978 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம். அதாவது மாதத்துக்கு ரூ.452 கோடி இழப்பு என்று கூறப்படுகிறது.

 தமிழக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 தமிழக போக்குவரத்துறையின் கீழ் உள்ள 8 கழகங்கள் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

  அதே போல் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகிறது.

 அப்படிய் இருக்க, 2022 - 2023-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்க மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

  ஆனால், இந்த கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ரூ.452.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு முந்தைய 2019 20-ம் நிதியாண்டில் ரூ.5230 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.435.88 கோடி இழப்பு ஏற்பட்டது. கொரோனா காலத்தில் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.8328 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.694.58 கோடியும், 2021 - 22ம் நிதியாண்டில் ரூ.6622.21 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.551.85 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு இந்த நிதியாண்டில் நஷ்டம் குறைந்துள்ளது எனத் அந்த புள்ளிவிவரத்தில் உள்ளது