மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
கு.அசோக்,
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு. மின்வாரியத் துறையினரின் அலட்சியம் காரணமாக உயிர் பறிபோனதாக பொதுமக்கள் சாலை மறியல்
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே உள்ள புது கேசவரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 22. இவர் வழக்கம் போல் விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வரும்போது அங்கு ஏற்கனவே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில் விக்னேஷ் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவ்வழியாகச் சென்ற நபர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தக்கோலம் காவல்துறையினர் உயிரிழந்த விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் விக்னேஷ் உயிரிழப்புக்கு காரணம் மின்வாரியத்துறையினரின் அலட்சியமே எனக் கூறி விக்னேஷ் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மின்வாரிய துறையினரை கண்டித்து தக்கோலம் பேரம்பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

admin
