234 தொகுதிகளில் விஜய் நடைபயணம்!

234 தொகுதிகளில் விஜய் நடைபயணம்!

ம.பா.கெஜராஜ்,

  அரசியல் அவதாரம் எடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு கட்சியையும் கட்சி கொடியையும் பிரபலப்படுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்கு முன்னர் மாநாடுகள் நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

   தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார் விஜய்.

 ஆனால் 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அவர் கட்சி தொடங்கிய பின்னர் மக்களவை தேர்தலும், விக்கிரவாண்டி இடைதேர்தலும் நடந்தது, ஆனால் அதில் எவற்றிலும் தவெக போட்டிய்டவில்லை.

 ஆனாலும்  அரசியலில்  அடுத்தக் கட்ட பணிகளை விஜய் செய்துக் கொண்டுதான் உள்ளார்.

 அப்படியிருக்க கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதிலும் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 மேலும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மாநில மாநாட்டை நடத்தி முடித்த பிறகு, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்கள், நடைபயணங்களை விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

 மாநில மாநாடு மதுரையிலா அல்லது திருச்சியிலா என்று இன்னும் முடிவாகவில்லையாம். தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி இருப்பதாலும், அரசியல் தொடங்குபவர்கள் தங்களது முதல் அரசியல் பொதுக்கூட்டங்களை சென்டிமென்டாக மதுரையில் நடத்துவதாலும், தவெக முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தலாமா அல்லது மதுரையில் நடத்தலாமா என தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.