ரூ.14000 கோடி மோசடி செய்தIFS கிணற்றை தமிழக அரசு தோண்டினால் பூதம் கிளம்பும்
!ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம்,காட்பாடி வட்டத்தில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் என்கின்ற ஒரு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை லஷ்மி நாராயணன் என்பவர் துவக்கி நடத்தி வந்தார்.
இதன் வாயிலாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் சுமார் 14,000 கோடி பணத்தை வசூல் செய்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.
அவரைக் காப்பாற்றி தப்ப வைத்தது அப்போதைய அரசியல் பிரமுகர்கள் தான் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தற்போது நடந்து வரும் அரசு ஆனது இந்த பிரச்சனையை கையில் எடுத்து கிணறு தோண்டினால் பூதம் கிளம்பும் என்று முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றிய விவரம் வருமாறு,
தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்று ஆசை காட்டி ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், பூஜா ஜெயின் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தனியார் வங்கிகளில் Relationship Manager ஆக பணியாற்றியதும், அந்தப் பணியின் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்பு கொண்டு தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ரூ.23 லட்சம் பல்வேறு தவணைகளில் முதலீடு செய்யப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் வட்டி வழங்கப்பட்டு பின்னர் பணமும் வட்டியும் திருப்பித் தரப்படவில்லை என்பதே புகார். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ரூ.23 லட்சம் மோசடி புகாரில் ஒரு பெண்ணை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது ஒருபுறம் இருக்க, வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட IFS நிதி நிறுவனத்துக்கு எதிரான பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு மோசடி வழக்கு தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கும் முழுமையான பதில் தேவைப்படுகிறது.
IFS நிறுவனத்தின் மீது பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி பெருமளவில் முதலீடுகள் பெறப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடைபெற்றது.
அந்த நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாக அப்போது வெளியான தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு செய்தியில் ரூ.14,000 கோடி வரை முதலீடுகள் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்ததாகவும், மற்றொரு செய்தியில் ரூ.6,000 கோடிக்கும் மேல் மோசடி குற்றச்சாட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் பல்வேறு கட்டங்களில் குறிப்பிடப்பட்ட தொகைகளில் வேறுபாடுகள் இருப்பதால், உண்மையில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு அதிகாரப்பூர்வமான இறுதி கணக்கு பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
காவல்துறை அதிகாரி மீதே லஞ்சப் புகார்!
இந்த வழக்கில் இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், IFS மோசடி வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு DSP கபிலன் மீது லஞ்சப் புகார் எழுந்தது. முக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் விசாரணையை மெதுவாக்குவதற்காக ரூ.5 கோடி கமிஷன் கேட்டதாகவும், அதில் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டதாகவும் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், இதற்கு முன்பும் இதே வழக்கில் விசாரணை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதாகக் கூறி சில DSP-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், முக்கிய குற்றவாளிகளில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, IFS நிறுவனத்தின் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம், தங்கம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற ஆவணங்களிலும் பதிவாகியுள்ளது.
31 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.12 கோடிக்கும் அதிகமான ரொக்கம், தங்கம் மற்றும் ரூ.12.23 கோடி மதிப்பிலான 72 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.23 லட்சத்தில் பந்தா... ஆயிரக்கணக்கான கோடியில் என்ன நடந்தது?
ஒரு பெண் ரூ.23 லட்சம் முதலீட்டை பெற்று திருப்பித் தரவில்லை என்ற புகாரில் கைது செய்யப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் IFS விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் தொடர்பான விசாரணை, அவர்களின் சொத்துக்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் நபர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பான விசாரணை ஆகியவை முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறிப்பாக, இந்த நிறுவனத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதலீடு செய்திருந்ததாக அப்போதைய செய்திகள் குறிப்பிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அல்லது செல்வாக்கு மிக்க நபர்கள் யாரேனும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களா என்கிற பெரிய கேள்வியும் உள்ளது.
முதலீட்டாளர்களை நிறுவனத்தில் பணம் செலுத்தச் செய்வதில் அதிகாரிகள் அல்லது அரசு ஊழியர்களின் பங்கு இருந்ததா, லஞ்சப் பணம் முதலீடு என்ற பெயரில் நிறுவனத்தின் வழியாகச் சென்றதா என்பன போன்ற கேள்விகளுக்கும் விசாரணை அமைப்புகள் தெளிவான பதில் அளிக்க வேண்டியுள்ளது.
இந்தக் கேள்விகள் அனைத்தும் வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளாக விட்டுவிடாமல், வங்கி கணக்குகள், முதலீட்டு ஆவணங்கள், தொலைபேசி மற்றும் பணப்பரிவர்த்தனை பதிவுகள், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிஜமாகவே விசாரிக்கப்பட வேண்டியவை.
தமிழக அரசு மீண்டும் கையில் எடுக்க வேண்டிய வழக்கு
இன்றைக்கு ரூ.23 லட்சம் மோசடி புகாரில் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறை, அதைவிடப் பல மடங்கு பெரிய அளவில் பொதுமக்களின் பணம் தொடர்புடையதாகக் கூறப்படும் IFS வழக்கில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
முக்கிய குற்றவாளிகளில் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பது, அவர்களுக்கு எதிராக Red Corner Notice நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, வழக்கை விசாரித்த அதிகாரி மீதே லஞ்சப் புகார் எழுந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது போன்ற தகவல்கள் ஏற்கெனவே வெளிப்பட்டுள்ள நிலையில், “பெரிய அளவிலான மோசடி வழக்கில் உண்மையான பயனாளிகள் யார்? பணம் எங்கு சென்றது? யார் யாருக்கு உதவினர்? விசாரணையில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்ன?” என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.
சிறிய தொகை மோசடிகளில் உடனடி கைது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் பொதுமக்களின் முதலீடுகளை உள்ளடக்கிய வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை கண்டறிந்து, வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை சட்டப்படி மீண்டும் அழைத்து வந்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும், IFS வழக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளின் உண்மை கணக்கு எப்போது வெளிவரும் என்கிற கேள்வி ஒரு பக்கம் எழுகின்ற நிலையில் தற்போது வரைக்கும் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான ஜனார்த்தனன் மோகன் பாபு மற்றும் வேத நாராயணன் என்பவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இருந்தாலும் கூட முக்கிய இயக்குனரான லட்சுமி நாராயணன் என்பவர் வெளிநாட்டில் தலைமறைவாக வைக்கப்பட்டிருக்கிறார், அவர் வெளிநாட்டில் இருந்தபடியே வேலூர் காட்பாடி காஞ்சிபுரம் அரக்கோணம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பெரிய சொத்துக்களை விற்பனை செய்திருக்கிறார்.
அப்படி கோல்மால் பண்ணி விற்ற சொத்தில் உரிமை கொண்டாடும் வகையில் இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், அந்த குறிப்பிட்ட வீட்டில் இருப்பவரை கேட்டபொழுது அவர்கள் நந்தகுமார் என்கின்ற அப்போதைய சட்டமன்ற உறுப்பினரின் பெயரை சொல்லி வருகிறார்களாம்.
ஆகவே போலீசார் தங்கள் கடமையை சரிவர செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் லட்சுமி நாராயணன் என்ன வேறு எந்த நாராயணன் இருந்தாலும் அவர்களை லபக்கென்று அமுக்கி இருப்பார்கள்.
என்ன செய்வது அவரிடம் இருந்து பெரும் தொகையை அரசியல் புள்ளிகள் அள்ளிக் கொண்டதாலேயே காப்பாற்றப்பட்டனர் என்பது தற்போதைய செய்தி இந்த விஷயத்தை தமிழக அரசு கையில் எடுத்தால் பல பூதங்கள் கிளம்பும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்.
குறிப்பு: ஐ எஃப் எஸ் மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டகாவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அதை காவல் ஆய்வாளர்கள் ஏற்பதில்லை. இது குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடிய நிலைமை எல்லாம் இருந்தது நினைவு கூறத்தக்கதாகும்.

admin
