கலெக்டர் காலில் விழுந்தும் டாஸ்மாக் அங்கேயே உள்ளதே! மக்கள் வேதனை!

கலெக்டர் காலில் விழுந்தும் டாஸ்மாக் அங்கேயே உள்ளதே! மக்கள் வேதனை!

கு.அசோக்,

 டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அரக்கோணம் அருகே டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு  மாதத்தில் மட்டும் மூன்று இளைஞர்கள் மதுவால் உயிரிழந்து உள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரம் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததி பாளையம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.  இந்த மதுபான கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டுகளாக அப்பகுதி பெண்கள்  மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இது நாள் வரை டாஸ்மாக் கடை அகற்றவில்லை.

   கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3  இளைஞர்கள் மது பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.  இந்த கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் போலீசாரும் ரவுண்ட்ஸ் வருவதில்லை.  இரவு 11 மணிக்கு மேலும் மது விற்பனை செய்யப்படுகிறது.

  அப்போது இளைஞர்கள் குடித்துவிட்டு கூச்சலிட்டு அட்டகாசம் செய்கின்றனர். பெண்களையும் கேலி கிண்டல் செய்கின்றனர். மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் காலில் விழுந்து மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை.

  எனவே இந்த கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் காலை முதல் அப்பகுதி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் அப்பகுதி பெண்களிடம் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் கடையை இடமாற்றம் செய்வது குறித்து தகவல் தெரிவித்துவிட்டேன். இன்னும் ஒரு வார காலத்துக்குள் இங்கிருந்து கடை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும் என்றார்.

   அப்போது அங்கிருந்த பெண்கள் ஒரு  வாரத்துக்கு டாஸ்மாக் கடையை மூடி வைக்க வேண்டும் என்றனர்.

 அதற்கு வட்டாட்சியர் தகவல் தெரிவிப்பது மட்டுமே என்னுடைய வேலை.  ஒரு வாரத்துக்குள் கடை இடமாற்றம் செய்யாவிடில் என்னை நேரில் வந்து சந்தித்து முறையிடலாம் என்றார்.

  அதன் பிறகு அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். இது ஒருபக்கம் இருக்க மாலை 4 மணிக்கு  டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதானே! அவர்களுக்கு 10 ரூபாய் கடமை முக்கியமல்லவா?