வேலைக்கே வராமல் ரூ.75 ஆயிரம் சம்பளம்? எம்.எல்.ஏ. மருமகள் மீது புகார் – விசாரணைக்கு உத்தரவு!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் மேட்டியின் மருமகள் டாக்டர் அங்கிதா,
இவர்,அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றியபடியே எம்.டி. மருத்துவ மேற்படிப்பில் சேர்ந்ததாகவும், பணிக்கு வராமல் அரசு சம்பளம் பெற்றதாகவும் எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகல்கோட்டை வாம்பே காலனியில் செயல்பட்டு வரும் ‘நம்ம கிளினிக்’ மருத்துவமனையில் கடந்த 2025-ம் ஆண்டு டாக்டர் அங்கிதா அரசு மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் பாகல்கோட்டை எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மேற்படிப்பில் அவர் சேர்ந்துள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கிய நிலையில், அரசு கிளினிக்கில் பணிக்கு செல்லாமல் முழுநேர மாணவியாக படிப்பைத் தொடர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.
அரசு விதிமுறைகளின்படி முழுநேர மருத்துவ மேற்படிப்பில் இருக்கும் ஒருவர் அதே காலகட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி முழு சம்பளம் பெறுவது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், டாக்டர் அங்கிதா பணிக்கு வராமலேயே மாதம் ரூ.75 ஆயிரம் வீதம் சம்பளம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்பட வேண்டிய வாம்பே காலனி ‘நம்ம கிளினிக்’ முறையாக செயல்படாமல் இருப்பதாகவும், பொதுமக்கள் மருத்துவ சேவை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமார், நியமனம் முந்தைய அதிகாரியின் காலத்தில் நடைபெற்றதாகவும், தற்போது அங்கிதாவின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாலுகா சுகாதார அதிகாரி சரஸ்வதி, அங்கிதா எம்.டி. படிப்பில் சேர்ந்திருப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முறைகேடு நடைபெற்றிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

admin
