'திமுகவின் பக்கம் பாமக அதிமுகவின் பக்கம் விசிக என்பது வதந்தி! ராமதாஸ் அன்புமணி கிசு கிசு! முதலமைச்சர் முகஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

'திமுகவின் பக்கம் பாமக அதிமுகவின் பக்கம் விசிக என்பது வதந்தி! ராமதாஸ் அன்புமணி கிசு கிசு! முதலமைச்சர் முகஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

 ம.பா.கெஜராஜ்,

திமுகவை கேட்டுக் கொண்டுதான் அரசியல் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையில் விசிக இல்லை என்று திருமாவளவன் பரபரப்பாக பேசிய நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் 

பாமக திமுகவின் பக்கம்  வந்து, அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடக்கூடும் என்பது ஒரு வதந்திதான். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் தமிழக மக்கள் 3-வது முறையும் தோற்கடிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: அதிமுக - பாஜக கூட்டணியை திமுக கூட்டணி ஏற்கெனவே 2 முறை தோற்கடித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்ததுபோல தெரிந்தாலும், கள்ளக் கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் சமீபகால நிகழ்வுகள் இருந்தன.

  தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் தமிழக மக்கள் 3-வது முறையும் தோற்கடிப்பார்கள்.

   மக்களவை தொகுதி மறுவரையறையை திமுக எதிர்க்கவில்லை. எதிர்வர உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்யப்படுவதைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம். மக்கள்தொகை பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. நாட்டின் நலனுக்காக மத்திய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக கொண்டு மக்களவை தொகுதிகளை குறைப்பது என்ன நியாயம். இந்த அளவுகோலைத்தான் எதிர்க்கிறாம்.

  இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

  மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணைநிற்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சிக்க கூடாது. இதுதொடர்பாக பேச பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அவரும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.

  மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உணர்ந்திருப்பார். அதனால், நம்பிக்கையுடன் அவரது அழைப்பை எதிர்பார்த்திருக்கிறோம்.

  1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இது தொடரவேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

   இதுகுறித்து நாடாளுமன்றத்திலோ, நாட்டு மக்களுக்கோ பிரதமர் ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

   இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தி திணிப்பால் வட மாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகள், வட்டார மொழிகளை கடந்த 50 ஆண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்துள்ளோம். தமிழகம் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த விழிப்புணர்வுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது.

  அதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. திமுக ஆதரவு மாணவர்கள், இளைஞர்கள், தொண்டர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

   திமுக தலைவர்கள் கொடுமையான சிறை தண்டனையை எதிர்கொண்டனர். அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழி கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அதுதான் இன்றைய தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி, பண்பாட்டின் பாதுகாப்புக்கும் அடித்தளமாக உள்ளது.

  தமிழகத்தின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பாஜக அரசின் மறைமுக திட்டம் என்பதால்தான் மும்மொழி கொள்கையை தமிழகம் உறுதியுடன் எதிர்க்கிறது.

தோழமை கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களது ஒத்துழைப்புடன்தான் திமுக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

  தோழமை கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எப்போதும் மதிக்கிறேன். துணை முதல்வர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழக மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.

   ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டம் இயற்றும் அதிகாரமிக்கது. ஆளுநர் என்பது நியமன பதவி, கவுரவ பதவி. சட்டப்பேரவையின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

  மத்திய - மாநில உறவுகளில் ஆளுநருக்கான அதிகாரம், ஒரு தபால்காரருக்கு உரியதுதான் என்பதை திமுக தொடர்ந்து கூறிவருகிறது. அது தற்போது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவிக் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களை பொருத்தவரை தமிழுக்கு எதிராக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராக, தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராக செயல்படும் ஆளுநர், ஒரு பாஜக கட்சிக்காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

   'திமுகவின் பக்கம் பாமக வந்து, அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடக்கூடும். அதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் ஏற்படக்கூடும் என்றும் சில கிசுகிசுக்கள் உள்ளது குறித்து கேட்கிறீர்கள். நீங்களே முணுமுணுப்புகள் என்று சொல்லிவிட்டீர்கள். அதை புறந்தள்ளுங்கள். அது வதந்திதான். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமை கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன என்று பரபரப்பாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.