ரோபோ உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: ஒரே மாதத்தில் குணமடையும்—நறுவீ மருத்துவமனை நிறுவனர் ஜி. வி. சம்பத் பேட்டி! 

ரோபோ உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: ஒரே மாதத்தில் குணமடையும்—நறுவீ மருத்துவமனை நிறுவனர் ஜி. வி. சம்பத் பேட்டி! 

செய்தி:ஜி.குலசேகரன்,

வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக மருத்துவமனைத் தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நறுவீ மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு 2021ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

டாக்டர் வெர்ணன் லீ தலைமையில் இயங்கும் இந்தப் பிரிவில், வழக்கமான முறையிலும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடனும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

வழக்கமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைய பொதுவாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்றும், ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் சுமார் ஒரு மாதத்தில் குணமடைய வாய்ப்புள்ளதாகவும் சம்பத் கூறினார்.

இந்தச் சிகிச்சைக்கான கட்டணம் சுமார் ரூ.2.50 லட்சம் எனவும் அவர் தெரிவித்தார்.

வேலூர் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தின் சித்தூர், திருப்பதி, கடப்பா, மதனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாக மருத்துவமனைத் தலைவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பத் தெரிவித்தார்.

மேலும், ரத்தப் புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையமும், குழந்தையின்மைக்கான செயற்கைக் கருத்தரிப்பு மையமும் விரைவில் சர்வதேச தரத்தில் தொடங்கப்பட உள்ளதாக அவர் சொன்னார்.