காங்கிரஸில் அடுத்த விக்கெட்டை வீழ்த்தும் பாஜக! முன்னாள் முதல்வர் கமல்நாத்தை குடும்பத்துடன் அள்ளுகிறது!

ம.பா.கெஜராஜ்,
காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்கு பெற்ற முக்கிய தலைவர்களை ஸ்கெட்ச் போட்டு அள்ளி இணைத்துக்கொண்டு வருகிறது பாஜக. அந்த வகையில் தற்போது மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தை அவரது மகனுடன் சேர்த்து இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகிவந்தன.
இந்நிலையில் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் தனது சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரத் தகவலில் இருந்து 'காங்கிரஸ் கட்சி' என்ற அரசியல் அடையாளத்தை நீக்கி மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார்.
இது குறித்து கமல்நாத் கூறுகையில், "எதற்காக நீங்கள் அனைவரும் பரபரப்பாகிறீர்கள். இதை மறுப்பது விஷயமல்ல. அப்படி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயமாக தகவல் சொல்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இப்படி நாசுக்காக சொன்ன கமல்நாத் சிந்த்வாராவுக்குச் செல்வதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை ரத்து செய்துவிட்டு டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கமல்நாத்தும், மகன் நகுல்நாத்துடன் டெல்லியில் பாஜக முக்கியத் தலைவர்களை சந்திப்பார்கள் எனவும், கமல்நாத்துடன் 10 முதல் 11 எம்.எல்.ஏ.க்கள பாஜகவில் இணைவார்கள் என்றும் வடஇந்திய ஊடகங்கள் பரபரப்பான தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.