நாற்பது கோடி ரூபாய் டீசல், பெட்ரோல், பராமரிப்பு செலவு! கோவை மாநகராட்சி தில்லாலங்கடி!

எஸ்.ஜான் மரியஜோசப்,
கோவை மாநகராட்சியில், வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் மற்றும் பராமரிப்புச் செலவாக மட்டும் ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் செலவிடப்படுகிறதாம்.
இது பற்றின விவரம் வருமாறு,
2013-2014 நிதியாண்டின்போது, கோவை மாநகராட்சியில், 300 கோடி ரூபாய் வரை டெபாசிட் இருந்தது.
ஆனால் அவை கடந்த ஆறாண்டுகளில், அத்தனை நிதியும் கரைக்கப்பட்டதுடன், இப்போது சம்பளம் கொடுக்கவே நிதியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நிதிப்பற்றாக்குறையால் ரூ.150 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திடக்கழிவு மேலாண்மை, கொள்முதல், பராமரிப்பு, செலவு கணக்குகளில் மாநகராட்சியின் பொறியாளர்கள் பலரும் அடித்துள்ள கொள்ளைக்கு அளவே இல்லை.
கோவை மாநகராட்சியிலுள்ள வாகனங்கள் எண்ணிக்கை, அவற்றுக்கு ஆகும் மாதாந்திர எரிபொருள் செலவு, வருடாந்திர பராமரிப்புச் செலவு போன்ற பல்வேறு விபரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக பெறப்பட்டிருக்கிறது.
அதில் மத்திய மண்டலத்தில் 71, கிழக்கு மற்றும் மேற்கில் தலா 51, வடக்கில் 49, தெற்கில் 37 என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக, மாநகராட்சியின் வாகனங்களைத் தவிர்த்து, ஒப்பந்த முறையில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் தனியாக நிதி செலவிடப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து, மேயர், கமிஷனர், வி.ஐ.பி.,பயன்பாட்டுக்கென மூன்று இன்னோவா கார்கள் உட்பட 32 வாகனங்கள், அதிகாரிகளின் ஆய்வுக்காகத் தரப்பட்டுள்ளன.
இப்படி மொத்தத்தில் மாநகராட்சி பயன்படுத்தும், சுமார் 300 வாகனங்களுக்கு, ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வரை, எரிபொருள் செலவாவதாகக் கணக்குக் எழுதப்பட்டிருக்கிறது.
அதே போல், கடந்த ஜனவரி- செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், மேற்படி வாகனங்களுக்கு 16 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 992 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வண்டிக்கு மாதம் 73 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் செலவாகிறது.
இதில், ஒரு வண்டிக்கு 200 லிட்டர் டீசல் போடுவதாக பில் வாங்கி 120 லிட்டர் மட்டுமே போடப்படுகிறது. மீதமுள்ள தொகை, இன்ஜினியர், வண்டி டிரைவர், பங்க் நிர்வாகி ஆகியோர் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள்.
பராமரிப்பு என்ற பெயரில் பொறியாளர்கள் பெரும் தொகையை சுவாகா செய்கிறார்கள்.
2014லிருந்து 2018 வரை மட்டும், மாநகராட்சி வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவாக 53 கோடியே 96 லட்சத்து 59 ஆயிரத்து 299 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்த்தால்,வாகனங்களின் எரிபொருள், பராமரிப்புச் செலவாக மட்டும் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.
கோவை மாநகராந்சி அலுவலர்களின் காட்டில் பணமழைதான்.