கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட நபரை கம்பியால் தாக்கி பாஜக நிர்வாகி!
க.பாலகுரு,
தொழிலில் முதலீடு செய்ய கொடுத்த ரூபாய் 80 லட்சம் பணத்தை திரும்ப கேட்ட நபரை கம்பியால் தாக்கி பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் அராஜகம். திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தீபன்(37).
இவர் சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு நான்கு லட்சத்திற்கும் மேல் ஊதியமாக பெரும் தீபன் திருவாரூர் வாசன் நகரில் வசித்து வரும் தனது நண்பரான புகழ் என்பவர் மூலம் தொழிலில் முதலீடு செய்வதற்காக திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர் என்பவரிடம் ரூபாய் 80 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணம் கொடுத்து ஒரு வருடம் ஆன நிலையில் தீபனுக்கு முதலீடு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மீண்டும் சிங்கப்பூர் திரும்ப உள்ள தீபன் நேரடியாக சங்கரின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு தான் பணத்தை வாங்கவில்லை எனவும் பணத்தை திருப்ப தர இயலாது எனவும் சங்கர் கூறியதாக தெரிகிறது.
இருவருக்கும் இடையான வாய்வார்த்தை கைகலப்பாக மாறி சங்கர் தீபனை கம்பியால் தாக்கியுள்ளார். காயமடைந்த தீபன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
