காவல் நிலைய முற்றுகையில் 15 பேர் மீது வழக்கு!ஏலகிரி மலை விவகாரம்: பாலியல் புகாரில் ரயில்வே ஊழியர் கைது!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் மனோகர் (49) மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஏலகிரி காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மனோகரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 25ஆம் தேதி, 2026ஆம் ஆண்டுக்கான 0038 என்ற எண்ணில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகார் அளிக்கப்பட்டு பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்ற சூழ்நிலையில், வழக்கறிஞரின் ஒப்புதல் பெற்ற பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மனோகரை கைது செய்த பின்னர், சிறைக்கு அனுப்புவதற்கு முன் மருத்துவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் சிலர் காவல் நிலையத்தை வழக்கம்போலவே முற்றுகையிட்டு ரகளை செய்தனர்.

  அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினரைத் தாக்க முயன்றதாகவும், டிஎஸ்பியிடம் மரியாதையற்ற வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் மீது திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு எண் 308/2026; இந்திய சட்டப் பிரிவுகள் 189, 223 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வழக்கில் செல்வி, வைதேஸ்வரி, செல்வி, பாப்பாத்தி உள்ளிட்ட 15 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மனோகரன் மீது முத்தானூர் பகுதியில் நீண்டகாலமாகப் பல்வேறு புகார்கள் மற்றும் கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரபு குடும்பம், அவரது அண்ணன் சுதாகர் குடும்பம் உள்ளிட்ட சுமார் 4-5 குடும்பங்களை ஊரிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஊரில் நடைபெறும் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாகப் புகார்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், முத்தானூர் பகுதியில் நில உரிமை தொடர்பாகவும் கடுமையான சர்ச்சைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள், வரி செலுத்திய பதிவுகள் மற்றும் கடன் தொடர்பான ஆவணங்கள் இருந்தும், அவர்களால் தங்களது நிலங்களுக்குள் செல்ல முடியாத நிலை இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

வெளியூரிலிருந்து பழங்குடியின மக்களை அழைத்து வந்து குடியமர்த்தி, நிலங்கள் அனைத்தும் தனக்குச் சொந்தம் என மனோகரன் கூறி வருவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய ஆவணங்களை ஆய்வு செய்து, நில உரிமையாளர்களின் புகார்களையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

 மனோகரன் மீது ஏற்கெனவே நிலுவையில் உள்ளதாகக் கூறப்படும் வழக்குகள் மற்றும் புகார்களின் நிலை என்ன என்பதையும் காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தற்போதைய வழக்கில் சட்ட நடைமுறைகளின்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மனோகரன் பணியாற்றும் ரயில்வே துறைக்கும் இந்த விவகாரம் தெரியப்படுத்தப்பட்டு, துறை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கும், நிலம் தொடர்பாகப் புகார் அளித்த குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மனோகரன் மீது நிலுவையில் உள்ளதாகக் கூறப்படும் புகார்களைச் சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

கைது செய்யப்பட்ட மனோகரன் பணியாற்றும் ரயில்வே துறையும், சம்பந்தப்பட்ட வழக்கு விவரங்களைப் பரிசீலித்து விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.