இளம் அமைச்சர்கள் விரைவில் அறிவிப்பு! சீனியர் அமைச்சர்கள் மேலவைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்!

இளம் அமைச்சர்கள் விரைவில் அறிவிப்பு! சீனியர் அமைச்சர்கள் மேலவைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்!

  ம.பா.கெஜராஜ்,

 கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பல அமைச்சர்கள் இன்றைக்கும் ஸ்டாலினின் அமைச்சரவையில் சீனியர்களாக வீற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அப்படிப்பட்ட சீனியர்களில் பலரை மேலவைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய முகங்கள் பலருக்கு வாய்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 அந்த வகையில், திருவல்லிக்கேணி சேப்பாக்கம், திரு.வி.க. நகர், அணைக்கட்டு ஆகிய தொகுதிகளும், கடலூர், கொங்குமண்டலம், குறிப்பாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தி.மு.க. வின் அஜென்டாவிலுள்ள மேலவை விரைவில் அமைக்கப்படவுள்ள நிலையில் தான் தலைமை இவ்வாறு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

  அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் கலைக்கப்பட்ட மேலவை தற்போதுள்ள சட்டபேரவையால் மீண்டும் உதயமாவது உறுதியாகியுள்ளது.

  கருணாநிதி அவர்கள் 89 மற்றும் 96 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக இருந்த போது இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியும் மேலவையை கொண்டு வர இயலவில்லை,  மத்திய அரசிடம் அ.தி.மு.க. முட்டுக்கட்டை போட்டதே அதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் 78 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையை அமைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த 78 பேரில் மூன்றில் ஒரு பகுதி உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12-இல் ஒரு பகுதி பட்டதாரிகள், ஆசிரியர்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவகர்கள் எனப் பல்வேறு துறைகளிலிருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படுவர். இந்த பட்டியலில் வட மாவட்டத்திலிருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல வழக்கறிஞரின் பெயரும் இடம் பெற்றால் நலம் என்று அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள்.

   இளம் தளபதிக்கு என்ன துறை என்பது முடிவானவுடன் முறையான அறிவுப்புகள் வெளியாகுமாம்.

   தமிழக அரசு நிர்வாகத்தில் இளம் ரத்தம் பாய்ச்சுவது நிர்வாக நடைமுறைக்கு கூடுதல் பலம் தரும் அல்லவா.